திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.22 திருப்பஞ்சாக்கரப்பதிகம்
பண் - காந்தாரபஞ்சமம்
துஞ்சலுந் துஞ்சலி லாத போழ்தினும்
நெஞ்சக நைந்து நினைமின் நாடொறும்
வஞ்சகம் அற்றடி வாழ்த்த வந்தகூற்
றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.
1
மந்திர நான்மறை யாகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்
கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே.
2
ஊனிலு யிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்
ஞானவி ளக்கினை யேற்றி நன்புலத்
தேனைவ ழிதிறந் தேத்து வார்க்கிடர்
ஆனகெ டுப்பன அஞ்செ ழுத்துமே.
3
நல்லவர் தீயரெ னாது நச்சினர்
செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ
கொல்லந மன்தமர் கொண்டு போமிடத்
தல்லல்கெ டுப்பன அஞ்செ ழுத்துமே.
4
கொங்கலர் மன்மதன் வாளி யைந்தகத்
தங்குள பூதமும் அஞ்ச வைம்பொழில்
தங்கர வின்படம் அஞ்சுந் தம்முடை
அங்கையில் ஐவிரல் அஞ்செ ழுத்துமே.
5
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும்
அம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே.
6
வீடு பிறப்பை யறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன பின்னை நாடொறும்
மாடு கொடுப்பன மன்னு மாநடம்
ஆடி யுகப்பன அஞ்செ ழுத்துமே.
7
வண்டம ரோதி மடந்தை பேணின
பண்டையி ராவணன் பாடி யுய்ந்தன
தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்
கண்டம் அளிப்பன அஞ்செ ழுத்துமே.
8
கார்வணன் நான்முகன் காணு தற்கொணாச்
சீர்வணச் சேவடி செவ்வி நாடொறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்
கார்வண மாவன அஞ்செ ழுத்துமே.
9
புத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச்
சித்தத் தவர்கள் தெளிந்து தேறின
வித்தக நீறணி வார்வி னைப்பகைக்
கத்திர மாவன அஞ்செ ழுத்துமே.
10
நற்றமிழ் ஞானசம் பந்தன் நான்மறை
கற்றவன் காழியர் மன்னன் உன்னிய
அற்றமில் மாலையீ ரைந்தும் அஞ்செழுத்
துற்றன வல்லவர் உம்ப ராவரே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com